இலங்கைக்கு நேற்று வந்தடைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் திருத்தந்தை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். பௌத்த, இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் பாப்பரசருடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மாநாட்டு மண்டபத்துக்கு வந்த பாப்பரசரை மல்கம் ரஞ்சித் ஆண்டகை நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் சென்றார். பாப்பரசருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அத்துடன் நிகழ்வில் இந்து மதத்தின் சார்பில் உரையாற்றிய சிவசிறி மகாதேவ குருக்கள் உரையாற்றி முடிந்ததும் பாப்பரசருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நாட்டின் அனைத்து மதங்களினதும் பிரதிநிதிகள் இந்த சர்வமத மாநாட்டில் கலந்துகொண்டனர். முதலில் பௌத்த மதத்தின் சார்பில் கம்புறுகமுவே வஜிர தேரர் உரையாற்றினார்.
இந்து மதத்தின் சார்பில் உரையாற்றிய சிவசிறி மகாதேவ குருக்கள், இலங்கை தாய்திருநாட்டுக்கு பாப்பரசர் வருகை தந்ததன் மூலம் பாரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் உங்கள் வருகை இந்த நாட்டுக்கு சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வரட்டும். நீங்கள் உலக சமாதான தூதுவராக வந்துள்ளமை மகிழ்சசியளிக்கும் விடயமாகும். எனவே உங்களுக்கு நன்றி கூறி வாழ்த்துவதுடன் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சமயத்தின் சார்பில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமா சபையின் ஊடக பிரிவின் செயலாளர் அஷ் ஷெய்யிக் பாசில் பாரூக் உரையாற்றுகையில், அண்மையில் பிரான்ஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்க்கின்றோம். இஸ்லாம் மதம் அன்பை போதிக்கின்றது. எனவெ இந்த இடத்தில் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். அதாவது மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்த இடத்தில் கோருகின்றோம். நாம் ஒவ்வொருவரும் எமது நம்பிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பாப்பரசரின் இலங்கை விஜயமானது இந்த நாட்டின் ஒரு உறவுப் பாலமாகவும் சகவாழ்வுக்கான விடயமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டார். மேலும் அங்லிக்கன் திருச்சபையின் பேராயரும் இந்த நிகழ்வில் உரையாற்றினார்.
அந்த சந்திப்பையடுத்து பாப்பரசரின் நேற்றைய நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன. பாப்பரசர் வத்திக்கான் தூதரக இல்லத்தில் நேற்று இரவு தங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக