இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வு வழங்க வேண்டு மென்ற அழைப்பையும் இலங்கை வரும் பாப்பரசர் விடுப்பார் என்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.” இவ்வாறு மன்னார் ஆயர் இராயப்பு யோசப், திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆகியோர் தெரிவித்தனர்.
இலங்கையில் அமைதியும் சமாதானமும் வரவேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீட்சி பெற வேண்டும்.
சமாதானப் பாதையில் இலங்கை செல்ல வேண்டுமானால் அரசியல் தீர்வுக்கான வழிகளை அரசு திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை பாப்பரசர் தனது உரையில் குறிப்பிடுவார் என நாம் நம்புகின்றோமென மேலும் அவர்கள் தெரிவித்தார்கள்.
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸில் திருத்தந்தையின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு கருத்துத் தெரிவித்த போதே ஆயர் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூவரும் இவ்வாறான கருத்தை தெரிவித்தனர்.மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு யோசப் தன கருத்தைத் தெரிவிக்கும் போது பாப்பாண்டவர் இலங்கைக்கு வருவது இலங்கையில் கடமையாற்றி வரும் யோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதப்பட்டதை அளிப்பதற்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஆசீர்வதிப்பதற்காகவுமாகும்.
பாப்பரசரின் வருகை எக்காரணம் கொண்டும் அரசியல் மயமாக்கப்படக் கூடாது. அத்தகையதொரு சந்தர்ப்பமும் உருவாக்கப்படமாட்டாது. மடுமாதா தேவாலயம் சமாதானத்தின் ஒருமையமாக இருந்து வருகிறது. அங்கு வருகை தரவிருக்கும் பாப்பரசர் வடகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை அங்கு சந்தித்து ஆசீர்வதிப்பதற்காகவும் அவரின் வருகை அமைய இருக்கிறது.
அவ்வேளையில் எல்லா மக்களும் குடும்ப உணர்வுடன் சகோதர வாஞ்சையுடன் ஒன்று கூடி பாப்பரசரிடம் ஆசீர்வாதம் பெற வேண்டுமென்பதே எமது பேராசையாகும்.
30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் நேரடியாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு சுபீட்சமான வாழ்வொன்று கிடைக்கப் பெற வேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பாப்பரசரை சந்திக்கவிருப்பது மாபெரும் வரப்பிரசாதமென்றே கூற வேண்டும். எனவே தான் அவரின் வருகையை அரசியல் மயப்படுத்தக் கூடாது என எதிர்பார்க்கின்றோம்.
இந்த நாட்டில் நல்லதொரு அரசியல் சூழ்நிலையும் சமாதான சூழலும் உருவாக வேண்டுமானால் அரசாங்கம் உலக நாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும். போரினால் ஏற்பட்ட வடுக்களை இல்லாது ஒழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வில் ஒரு மீட்சியை உருவாக்க வேண்டுமென்பதே எமது பேரவா ஆகும்.
திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை தனது கருத்தை தெரிவிக்கையில்,
கத்தோலிக்க திருச்சபைக்கு தலைமை வகிக்கும் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் எமது நாட்டுக்கு வருகை தருவது மாபெரும் வரப்பிரசாதமாகும்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க நிறுவனங்கள், ஆலயங்கள், நிர்மூலமாக்கப்பட்ட வேளையில் கோவை நாட்டிலிருந்து வந்தவர்கள் இலங்கையில் அளப்பரிய தொண்டு செய்தார்கள். மக்கள் அவர்களின் தொடுகளை ஏற்றுக்கொண்டார்கள். தற்போது புனித தந்தையென்ற வகையில் அவர் இலங்கை வருவது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
யுத்தத்தினால் பாதிக்கபப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவரும் அவரின் வருகை நல்லதொரு மாற்றத்தைத் தருமென்று நம்புகின்றோம். புனித தந்தை நாட்டின் அரசியல் தலைவர்களை மற்றும் சமயப் பெரியோர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
இச்சந்திப்பின் போது இதனூடாக நாட்டின் பிரச்சினைக்கு தீர்க்கப்படாதுள்ள சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைக்கும் நல்ல தீர்வொன்றை வழங்க வேண்டுமென்ற அழைப்பொன்றையும் விடுவார் என்பதையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
அவருடைய வருகை கத்தோலிக்க கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதத்தவர்களுக்கும் ஒரு மாபெரும் ஆசிர்வாதமாக இருக்குமென நாம் நம்புகின்றோம் என ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா கருத்துத் தெரிவிக்கையில்,
பாப்பரசரின் வருகையை மிக நீண்ட காலமாகவே இலங்கை மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். பாப்பரசரின் வருகையின் போது மூன்று இடங்களில் தந்தை உரையாற்றவுள்ளார்.
விமான நிலையத்திலும் இரண்டாவது அனைத்து மத சமயத் தலைவர்களை சந்தி்க்கின்ற வேளையிலும், காலி முகத்திடலில் நடைபெறவுள்ள திருப்பலி நிறைவேற்றும் போதும் உரையாற்றுவார். அத்துடன், மடு ஆலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு உரையாற்றி ஆசீர்வதிக்கப்பட உள்ளார்.
இவற்றுடன் ஜனாதிபதி மற்றும் பல சமயத் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுமுள்ளார்.
அரசாங்கத்திற்கு நல்ல செய்தியை பாப்பரசர் கூறுவார் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். பாப்பரசர் இலங்கையின் எல்லா வகைப் பிரச்சினைகளையும் நன்கு அறிவார்.
எனவே, இலங்கையில் நிரந்தர சமாதானமும் அமைதியும் வர பாப்பரசர் ஆசீர்வதிப்பார் என நாம் எதிர்பார்க்கிறோமென ஆயர் பொன்னையா தெரிவித்தார்.