ஈஸ்டர் ஸ்பெஷல் கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை ஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
உலகத்தை எகிப்து, மேதியா, பாரசீகம், பாபிலோன், கிரேக்கம், ரோம் என ஆறு பேரரசுகள் ஆட்சி செய்தன.
கி.பி. 1ல் ரோம் நாட்டின் பேரரசராக திபேரியு என்பவர் ஆட்சி செய்தார்.
அந்தக் காலத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள யூதகுலத்தில் கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு பிறந்தார்.
கி.பி. 34ல் யூதாஸ் என்ற சீடனால் 30 வெள்ளிக்காசுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டார். யூத மதக்குருக்கள் அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி சிலுவையில் அறைந்து கொன்றனர்.
இயேசுவின் சரீரம் கன்மலையில் உள்ள கல்லறையில் வைக்கப்பட்டது.
மரணத்திற்குப் பின்பு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்று இயேசு முன்னறிவித்து இருந்ததால் ரோம் நாட்டின் போர்ச் சேவகர்கள் அவரது கல்லறையைக் காவல் காத்தனர்.
மூன்றாம் நாள் அதிகாலையில் வானத்தில் இருந்து வந்த கடவுளின் தூதன், கல்லறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய கல்லைப் புரட்டி அதன் மீது அமர்ந்தான், போர்ச்சேவகர்கள் தரையில் விழுந்து செத்தவர்கள் போல ஆனார்கள்.
அப்போது இயேசுவின் கல்லறைக்கு மரியாதை செலுத்த சிலர் வந்தனர். கல் புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டதும், சரீரத்தை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர் என்று புலம்பினர்.
அப்போது அங்கிருந்த கடவுளின் தூதன் அவர்களை நோக்கி,"அவர் அங்கே இல்லை, தாம் சொன்னபடி உயிர்த்தெழுந்தார்'' என்றார்.
பின்பு 11 சீடர்களில் தோமா என்பவரைத் தவிர பத்து பேர் பூட்டியிருந்த ஓர் அறையில் இருந்தனர். இயேசு அவர்களின் நடுவே காட்சியளித்தார்.
தோமாவுக்கு இந்த தகவலை அவர்கள் கூறினர், தோமாவோ இதை நம்பவில்லை.
அப்போது இயேசு அங்கு வந்தார், தோமாவை நோக்கி “சந்தேகப்படாதே” என்று கூறி அவனது கைவிரலால் தன் காயங்களைத் தொட்டுக் காட்டினார்.
அவன் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதான். இயேசு சீடர்களை நோக்கி,"கண்டு நீங்கள் விசுவாசிப்பீர்கள். காணாமல் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்'' என்று கூறினார்.
அன்று முதல் இயேசு 40 நாட்கள் வரை தம்மை நம்பிய சீடர்களுக்கு காட்சியளித்து, 40வது நாள் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்.
ஈஸ்டர் முட்டை
முட்டையானது ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் கருதப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.
ஈஸ்டர் விழா அன்று நன்றாக வேக வைக்கப்பட்ட முட்டையை சர்க்கரைப்பாகு ஊற்றி பதப்படுத்தி வண்ணம் பூசி அழகுபடுத்துகின்றனர்.
அதை கூடைகளில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். பெரும்பாலும் இதில் சிவப்பு வண்ணம் தடவுவது வழக்கம்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உலக மக்களுக்காக ரத்தம் சிந்தியதை நினைவு கூரும் வகையில் இந்த வண்ணம் தடவப்படுகிறது.
ஆனால் தற்கால வழக்கில் சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக